Latestமலேசியா

அடுத்த 4 மாதங்களில் மலாக்கா மாநிலத் தேர்தல்? – முதலமைச்சர் சூசகம்

மலாக்கா, மே-18-மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த 4 மாதங்களுக்குள் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

​மாநில பாரிசான் நேஷனல் தலைவரும், முதலமைச்சருமான டத்தோ ஸ்ரீ Ab Rauf Yusoh, அடுத்த 120 நாட்களுக்குள் பொருத்தமான ஒரு தேதியைத் தேர்ந்தெடுக்க மாநிலத் தலைமை ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

​தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதாக இருந்தாலும், அதுவரை காத்திருந்தால் தேர்தல் பிரச்சாரங்கள் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் வரக்கூடும் என்று அவர் விளக்கினார்.

அந்தக் காலகட்டம் புனித இரமலான் மாதம் மற்றும் ஹரி ராயா பண்டிகையோடு வருமென்பதால், அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்த திட்டமிடப்படுகிறது.

​இவ்வேளையில், ஜோகூர் பாரிசான் நேஷனல் எடுத்த முடிவைப் போல, மலாக்கா பாரிசானும் தனித்து போட்டியிடுமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், மற்ற கட்சிகளுடன் இணைவதா அல்லது தனித்து களமிறங்குவதா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் Ab Rauf கூறினார்.

​இருப்பினும், கடந்தாண்டு முதலே இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், தற்போதைய BN மாநில தலைமைக்கு மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

​2021 மலாக்கா மாநிலத் தேர்தலில், மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 21 இடங்களைக் கைப்பற்றி பாரிசான் நேஷனல் அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!