மலேசியா

ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிக்கும் பதற்றம்: முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்த பிரதமர் அன்வார் கோடிகாட்டியுள்ளார்

ஜோகூர் பாரு, மே-18-ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளுக்குள் நிலவும் உட்பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் மேலும் மோசமடைந்தால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு திடீர் பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுப்பேன் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.

அவரின் இப்பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிக்குள் நிலவும் முறுக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மக்களிடம் புதிய ஆணையைப் பெறவும் பிரதமருக்கு இருக்கும் இறுதி வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது.

ஜோகூர் பாருவில் நடைபெற்ற பி.கே.ஆர் பொதுப் பேரவையின் முடிவில் அன்வார் சற்று தடித்த குரலில் இதனைத் தெரிவித்தார்.

கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் மற்றவர்கள் முறுக்கிக் கொண்டால், பி.கே.ஆரும் அதிரடி நடவடிக்கையை எடுக்கும்.

அவ்வகையில், ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து 56 தொகுதிகளிலும் பக்காத்தான் ஹராப்பான் தனித்தே போட்டியிடும்; நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தையும் கலைத்து 36 தொகுதிகளிலும் PH தனித்து நிற்கும் என்றார் அவர்.

“மற்றவர்கள் சமாதானமாகச் சென்றால், நாங்களும் இணக்கமாக இருப்போம்” என பேராளர்களின் பலத்த கரவொலிக்கு இடையே அன்வார் தெரிவித்தார்.

அடுத்தாண்டு ஏப்ரலில் ஐந்தாண்டு தவணை காலத்தை நிறைவுச் செய்யும் ஜோகூர் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடக்கும் போது, அனைத்து 56 தொகுதிகளிலும் பாரிசான் நேஷனல் தனித்தே போட்டியிடும் என மாநில மந்திரி பெசார் அறிவித்திருக்கும் நிலையில், அன்வாரின் இப்பேச்சு அமைந்துள்ளது.

இதனிடையே, வேறொரு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், இது குறித்துத் துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியுடன் மிக ‘சுமுகமான முறையில்’ பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அன்வார் சொன்னார்.

அதன்போது, ஜோகூரில் PH – BN இடையிலான தேர்தல் கூட்டுப் யுக்தி மற்றும் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கவுள்ளதாக அவர் கூறினார்.

நமக்குள் ஏன் வீண் சண்டை?” என்றார் அவர்.

கூட்டணி கட்சிகளிடையே தேர்தல் தொகுதி பங்கீட்டில் எழுந்துள்ள இப்பிரச்னை, திடீர் தேர்தல் என்ற பேச்சு வரைக்கும் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!