அதிகாரத்தில் இருந்தபோது எதுவும் செய்யாதவர்கள் இன்று சீர்திருத்தம் பேசுகின்றனர்; அன்வார் சாடல்

கோலாலம்பூர், ஜனவரி-4,
அதிகாரத்தில் இருந்தபோது எதையும் செய்யாமல், இப்போது தினம் தினம் சீர்திருத்தம் பற்றி பேசும் அரசியல் தலைவர்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிகாரத்தில் இல்லாதபோது சீர்திருத்தம் குறித்து கடுமையாக விமர்சிப்பவர்கள், பிரதமர்களாகவோ அமைச்சர்களாகவோ
அவர்களே அதிகாரத்தில் இருந்த காலத்தில் எந்த முக்கிய மாற்றங்களையும் செய்யவில்லை.
ஆனால் இன்று வாய்வலிக்க சீர்திருத்தம் பற்றி அவர்கள் பேசுவது விந்தையாக உள்ளதாக, அன்வார் சாடினார்.
எது எப்படி இருப்பினும், மடானி அரசாங்கம், சீர்திருத்த திட்டத்தில் உறுதியாக உள்ளது… குறிப்பாக ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தவறான நிர்வாகத்தை எதிர்க்கும் முயற்சிகளில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
அரசாங்கத் தரப்பில், நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாக நடைமுறையில் உள்ளன என வலியுறுத்தப்பட்டாலும்,
எதிர்க்கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் சீர்திருத்தங்களின் வேகம் போதுமானதாக இல்லை என விமர்சித்து வருகின்றன.



