
வாஷிங்டன், ஜூன்-14 – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் திட்டமிட்டபடி இன்று ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், ஈரான் தரப்பு இந்த காலக்கெடு குறித்து தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை நிறுத்தக்கூடிய இஸ்லாமாபாத் ஒப்பந்தம் (Islamabad MoU) ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகத் திட்டமிடப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்திற்கு மிக முக்கியமான Hormuz நீரிணை மீண்டும் அனைத்து நாடுகளின் போக்குவரத்துக்கும் திறந்துவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தானிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒப்பந்தம் இறுதிச் செய்யப்பட்டு, மின்னணு முறையில் கையெழுத்தாவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த அறிவிப்புகளுக்கு முன்னதாகப் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், ஞாயிற்றுக்கிழமை இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்றும், சரியான தேதிக்காக இன்னும் காத்திருக்க வேண்டும் என்றும் சற்று எச்சரிக்கையுடன் கூறினார்.
இந்த அமைதி ஒப்பந்தத்தின் கீழ், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்கவும், லெபனானில் இஸ்ரேல் – ஹெஸ்புல்லா இடையிலான மோதல்களை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானின் அணுசக்தி கையிருப்பு குறித்துப் பேசிய ட்ரம்ப், தகுந்த நேரத்தில் அமைதி திரும்பியவுடன் அவை அனைத்தும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுடன் தொடங்கிய இந்தப் போர், தற்பொழுது இறுதி கட்ட பேச்சுவார்த்தையை எட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் தரப்பு ஒப்பந்தம் உடனே கையெழுத்தாகும் என அவசரம் காட்டினாலும், ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே இன்னும் சில இறுதி விவாதங்கள் நீடித்து வருவதால் இந்த ஒப்பந்தம் எப்போது அதிகாரப்பூர்வமாகும் என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் அதிகரித்துள்ளது.



