Latestமலேசியா

18 மாத ஆண் குழந்தையைக் கொன்றதாகத் தந்தை மீது கொலைக் குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, ஜூலை-29-மூன்று ஆண்டுகளுக்கு முன், தனது 18 மாத ஆண் குழந்தையைக் கொன்றதாக 40 வயதுடைய நபர் ஒருவர் மீது ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட ஜி. தேவேந்திரன் எனும் அவ்வாடவர் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அதைப் புரிந்து கொண்டதை உணர்த்தும் வகையில் தலையசைத்தார். எனினும், அவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், அவரிடம் இருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இதற்கு முன் சிங்கப்பூரில் பணி புரிந்த அந்த நபர், 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி காலை 8.30 மணிக்கும் 10.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், Bandar Baru Permas Jaya பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் அக்குழந்தையைக் கொன்றதாகக் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சாகும் வரை தூக்கு அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். தூக்குத் தண்டனை விதிக்கப்படாவிட்டால், குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் வழங்கப்படும்.

தேவேந்திரன் சார்பில் வழக்கறிஞர் யாரும் வாதாட நிலையில், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. மேலும் மரபணு, நோயியல் மற்றும் தடயவியல் பரிசோதனை அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் அக்டோபர் 1-ஆம் தேதியை நிர்ணயித்தது.

முன்னதாக, குழந்தையின் உயிரியல் தந்தையும் முக்கிய சந்தேக நபருமாக அடையாளம் காணப்பட்ட தேவேந்திரன் ஜூலை 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மரணம் கொலையாக மறுவகைப்படுத்தியது.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி அவர் அக்குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றுள்ளார். மருத்துவப் பரிசோதனையில் இடுப்புப் பகுதியில் காயங்கள், வயிறு வீக்கம் மற்றும் மலக்குடல் பகுதியில் வீக்கம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்ட அந்த ஆண் குழந்தை இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!