
புத்ரா ஜெயா, ஏப் 18 – சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மலேசியா, வியட்நாம் மற்றும் கம்போடியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை கேலி செய்ததற்காக அமெரிக்காவைச் சேர்ந்த பழமைவாத அரசியல் விமர்சகரான Bil O’Reilly ரை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Fox News ஸின் முன்னாள் தொகுப்பாளரான Bill O’Reilly யின் அறிக்கை இனவெறி மற்றும் இஸ்லாமிய வெறுப்பை பிரதிபலிப்பதாக அன்வார் கூறினார். அவரது நாடு மட்டுமே வெற்றி பெறுகிறது என்ற அனுமானத்துடன், ஆணவமும் அறியாமையும் நிறைந்த ஒரு தீவிரமான பார்வையாக அந்த அறிக்கை இருக்கிறது என அன்வார் சுட்டிக்காட்டினார்.
ஆசியா, ஆசியான் அல்லது பிராந்தியத்தின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அவருக்கு எந்த புரிதலும் இல்லை என்பது தெளிவாகிறது என்று நிதி அமைச்சில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் அன்வார் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் வைரலான ஒரு கிளிப்பில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான சீனாவின் பொருளாதார மதிப்பை ஓ’ரெய்லி கேள்வி எழுப்பியிருந்தார்.
“ஹே, அதிபர் Xi , நான் நேர்மையாகச் சொல்கிறேன். அந்த நாடுகளிடம் பணம் இல்லை. அவர்களால் உங்களுக்கு உதவ முடியாது. அவர்களிடம் பணம் இல்லாததால் அவர்கள் உங்கள் பொருட்களை வாங்க மாட்டார்கள்.
நாங்கள்தான் பணம் வைத்திருப்பவர்கள், நாங்கள்தான் பொருட்களை வாங்குபவர்கள். ‘மலாய்க்காரர்கள்’ உங்கள் பொருட்களை வாங்க மாட்டார்கள். அவர்களிடம் பணம் இல்லை என்று அவர் அனைத்து மலேசியர்களையும் குறிக்க இனத்தின் சொல்லை O’ Reilly பயன்படுத்தினார்.
சீனப் பொருட்களுக்கான வரி தொடர்பாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே வர்த்தக நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில் அதிபர் Xi Jinping இம்மாதம் 15ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிவரை மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டிருந்தார்