Latestமலேசியா

அமைச்சரவைக் கருத்து வேறுபாடுகளைப் பிரச்சார மேடைகளில் அல்ல, அமைச்சரவைக்குள்ளேயே தீர்க்க வேண்டும் – அன்வார்

மலாக்கா, நவம்பர்-6,ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளைத் தேர்தல் பிரச்சார மேடைகளில் வெளிப்படுத்தாமல், அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்துத் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மலாக்காவில் நடைபெற்ற ‘மாலாம் ஹராப்பான்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தலைவர்கள், பிரச்சாரங்களின்போது அதே அரசாங்கத்தை விமர்சிப்பது முறையல்ல என்றார்.

கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவற்றை அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்… அதற்கான வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டும் அரசியலைத் தவிர்த்து, அனைத்து மலேசியர்களின் நலன்களையும் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார்.

மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் சபா, சரவாக் மாநில மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு, நாட்டின் ஒற்றுமையையும் நிலைத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதோடு, அரசியல்வாதிகள் தங்களது பதவிகளைப் பயன்படுத்தி நிலம், பங்குகள், ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்கள் மூலம் தனிப்பட்ட ஆதாயம் தேடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

பக்காத்தான் மற்றும் தேசிய முன்னணி தலைவர்கள் குறிப்பாக அமைச்சரவை உறுப்பினர்கள் இடையே கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது வெளிப்படையான கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், பிரதமரின் இப்பேச்சு கவனம் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!