கோலாலம்பூர், ஜூலை 9 – பாஸ் கட்சியின் தலைவராக அப்துல் ஹடி அவாங் இருக்கும்வரை அக்கட்சியுடன் ஒத்துழைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லையென இதற்கு முன் அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஸ் கட்சியும் இதே நிலையை எடுத்துள்ளது. அம்னோவின் தலைவராக அகமட் ஸாஹிட் இருக்கும்வரை அக்கட்சியுடன் ஒத்துழைப்பு எதுவும் கிடையாது என பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மூடா தெரிவித்திருக்கிறார். நேர்மையான தலைவராக அகமட் ஸாஹிட் இல்லையென்பதால் அவர் தலைவராக இருக்கும்வரை அம்னோவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லையென்று துவான் இப்ராஹிம் கூறியுள்ளார்.
ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னதாக DAP அல்லது பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் அம்னோ இணைந்து பணியாற்றாது என அகமட் ஸாஹிட் தொடர்ந்து கூறிவந்துள்ளதையும் துவான் இப்ராஹிம் சுட்டிக்காட்டினார். பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி சொந்த பலத்தில் வலுவுடன் இருப்பதாக பாஸ் நம்புகிறது. எதிர்காலத்தில் தங்களது கட்சியாக பெரிக்காத்தான் நேசனல் திகழமுடியும் என மலாய்க்காரர்களிடையே நம்பிக்கை விதையை உருவாக்க முடியும் என பாஸ் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.