
கோலாலாம்பூர், மே-28-கோலாலம்பூர், Chan Sow Lin LRT நிலையத்திற்கு அருகே இரயில் ஒன்று திடீரென தடம் புரண்டதை அடுத்து, அம்பாங் – ஸ்ரீ பெட்டாலிங் வழித்தட இரயில் சேவைகள் இன்று காலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை Chan Sow Lin நிலையத்திற்கு அருகிலுள்ள இரயில்வே சமிக்ஜை மாற்றுப் பாதையைக் கடக்க முயன்றபோது இந்த இரயில் எதிர்பாராதவிதமாகத் தடம் புரண்டு நின்றதாக, Rapid KL நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது இரயிலில் இருந்த 25 பயணிகளும் எவ்வித காயங்களுமின்றி, அவசரக் கால விதிமுறைகளின்படி தண்டவாளத்தின் வழியாகப் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த திடீர் விபத்தால் தலைநகரின் முக்கிய வழித்தட இரயில் போக்குவரத்து முடங்கியுள்ளதால், பயணிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயணிகளின் பயணத்தைத் தொடர ஏதுவாக, Pudu மற்றும் Pandan Jaya நிலையங்களுக்கு இடையே இலவச ‘shuttle’ பேருந்து சேவைகள் மற்றும் மாற்று இரயில்களை Rapid KL தற்காலிகமாக இயக்கி வருகிறது.
இரயிலை மீட்டெடுக்கும் பணிகளில் தொழில்நுட்பக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதோடு, சேவைகளை விரைவாக வழக்கத்திற்குக் கொண்டு வருவதே முதன்மை இலக்காகு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



