அலோர் காஜா, ஜூன் 12 – சொந்த சகோதரனை அரிவாளால் வெட்டி கடுமையான காயங்களை விளைவித்ததாக, ஆடவன் ஒருவனுக்கு எதிராக மலாக்கா, அலோர் காஜா செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டது.
எனினும் 27 வயது முஹமட் துவா மாட் டாலி (Muhammad Tuah Md Dali) எனும் அந்த ஆடவன், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினான்.
33 வயது முஹமட் ரெட்சா (Muhammad Redza) எனும் தனது சகோதரனை, வேண்டுமென்றே அரிவாளால் கொண்டு தாக்கி காயம் விளைவித்ததாக அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.
இம்மாதம் ஐந்தாம் தேதி, இரவு மணி 8.40 வாக்கில், கோலா சுங்கை பாரு மீனவ கிராமத்திலுள்ள, வீடொன்றில் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
15 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும் அவ்வாடவனை விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
இவ்வழக்கு விசாரணை ஜூலை 22-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
இதனிடையே, அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தமக்கு எதிராக சுமத்தப்பட்ட, போதைப் பொருள் உட்கொண்ட குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டான்.
நோயியல் அறிக்கைக்காக காத்திருப்பதால், அவ்வழக்கு ஜூலை 22-ஆம் தேதி செவிமடுக்கப்படுமென மாஜிஸ்திரேட் அறிவித்தார்.
முன்னதாக, மோட்டார் சைக்கிளை தரவில்லை என்பதற்காக, வியாபாரி ஒருவர் சொந்த தம்பியால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிடிருந்தது குறிப்பிடத்தக்கது.