
கோலாலம்பூர், நவம்பர்-14, ஆசியாவிலேயே அதிக திருநங்கைகளைக் கொண்ட முதல் 5 நாடுகளில் மலேசியாவும் ஒன்றெனக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.
இதற்கு எந்தவிதமான உண்மையான ஆதாரமும், சரிபார்க்கப்பட்ட தரவுகளும் இல்லை என, இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ நாயிம் மொக்தார் கூறினார்.
எனவே ஆசியாவில் திருநங்கைகள் எண்ணிக்கையில் மலேசியா 5-ஆவது இடத்தில் உள்ளதாக இணையத்தில் கூறப்படுவதை அரசாங்கம் ஏற்காது என்றார் அவர்.
இஸ்லாத்தை அதிகாரப்பூர்வ மதமாகக் கொண்ட மலேசியா ‘வழிதவறிய’ இந்த வாழ்க்கை முறையை ஒருபோதும் அங்கீகரிக்காது.
LGBTQ வாழ்க்கை முறையை இயல்பான ஒன்றாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் மலேசியாவின் சட்டம், அரசியலமைப்பு மற்றும் பண்பாட்டு மதிப்புகளுக்கு முரணானவை எனக் கருதி அரசாங்கம் நிராகரிக்கிறது என்றார் அவர்.
இந்நிலையில், LGBTQ கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் அல்லது கருத்துக்களை அதிகாரிகள் கவனமாக கண்காணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மடானி அரசாங்கத்தின் கீழ், மதமும் சமூக நெறிகளும் முன்னுரிமையாக இருக்கும் என மக்களவையில் அவர் தெரிவித்தார்.



