
கோலாலம்பூர், அக்டோபர்-24,
தேசியக் கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் கலப்பு மரபின வீரர்கள் 7 பேரை உட்படுத்திய போலி ஆவண சர்ச்சையில், தேசிய பதிவுத்துறையான JPN மீதான குற்றச்சாட்டுகளை உள்துறை அமைச்சு விளக்கியாக வேண்டும்.
JPN, உள்துறை அமைச்சின் கீழ் இருப்பதாலேயே அக்கோரிக்கையை தாங்கள் வலியுறுத்துவதாக, பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
ஆனால், கேள்வியின் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தங்களை “வெத்து வேட்டு” என கிண்டலிப்பது சரியல்ல என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட ஆட்டக்காரர்களின் பிறப்பிடம் பற்றிய உண்மை ஆதாரங்கள் இல்லையென்றாலும், FIFA வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நகலை JPN அளித்துள்ளது.
இது ஒரு “பெரிய குடியுரிமை சர்ச்சையாகும்”; தவிர அடிப்படை SOP நடைமுறைகள் பற்றிய கேள்வியையும் எழுப்பியுள்ளது.
எனவே தான் அதனை ஒரு முக்கியப் பிரச்னையாகக் கருதி மக்களவையில் கேள்வி கேட்கிறோம்; மாறாக யாரையும் குறிவைத்து தாக்குவதற்காக அல்ல என தாக்கியுடின் விளக்கினார்.
மலேசியக் கால்பந்து சங்கமான FAM சமர்ப்பித்த பிறப்புச் சான்றிதழ்களில் மாறுபாடுகள் காணப்பட்டதாகக் கூறி, அனைத்துலகக் கால்பந்து சம்மேளனமான FIFA, FAM-க்கு RM1.8 மில்லியன் அபராதமும், ஒவ்வொரு வீரருக்கும் 12 மாத தடை மற்றும் RM11,000 அபராதமும் விதித்துள்ளது.
ஆனால் எந்த போலி ஆவணமும் பயன்படுத்தப்படவில்லை என உள்துறை அமைச்சும் FAM-மும் மறுத்துள்ளன.



