
கோலாலம்பூரில் ,மே 7- அதிகரித்து வரும் கடன் சுமை காரணமாக, கடன் வழங்கும் வட்டி முதலைக் கும்பலால் தான் மிரட்டப்பட்டதாக பெண் பாடகி ஒருவர் கூறுகிறார்.
யீ என்ற பெயரில் மட்டும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் பாடகி, கடந்த மாதம் தனது இசை ஆல்பத்தை வெளியிடுவதற்கான செலவுகளுக்கு நிதியளிக்க, தொடக்கத்தில் வாட்ஸ்அப் பரிவர்த்தனை மூலம் கடன் பெற்றதாக விளக்கினார்.
உரிமம் பெற்ற கடன் வழங்கும் நிறுவனத்தைப் பிரதிநிதிப்பதாக கூறிக்கொண்ட ஒருவரால் அந்தக் கடன் வழங்கப்பட்டதாகவும், 45,000 ரிங்கிட் கடனுக்கு ஒப்புக்கொண்ட பிறகு, தனக்கு சுமார் 17,000 ரிங்கிட் மட்டுமே கிடைத்ததாக அந்த பாடகி கூறினார்.
கடன் கொடுத்தவர் அதிகப்படியான வட்டியைக் இம்மாதம் கோரியதாகவும் , அதன் பிறகு பல கடன் வழங்கும் கும்பல்கள் தன்னைத் தொடர்புகொண்டு ஆரம்பக் கடனைத் தீர்க்க உதவ கூடுதல் கடன்களை வழங்கியதாகவும் அப்பெண் விவரித்தார்.
ஒரு குறிப்பிட்ட தொகையை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அதே நாளில் செலுத்துமாறு அவர்கள் தன்னிடம் கோரியதாகவும் , பணம் செலுத்தத் தவறினால், அசல் வட்டித் தொகையை இரட்டிப்பாக்கி விடுவதாக மிரட்டி, அவர்கள் தன்னை மிரட்டிப் பணம் பறிக்கத் தொடங்கியதாக அப்பெண் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
அவர்கள் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் பணம் கேட்டுக்கொண்டே இருப்பதால் தம்மால் தப்பிக்க முடியவில்லை என்று இன்று ம.சீ.ச தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இதுவரை 20,000 ரிங்கிட்டிற்கு மேல் தாம் கடனை திருப்பி செலுத்திவிட்ட போதிலும் இனியும் கொடுப்பதற்கு பணம் இல்லையென்பதால் இது குறித்து சபா பெர்ணம் போலீசில் புகார் செய்துள்ளதாக அந்தப் பாடகி குறிப்பிட்டார்.



