Latestமலேசியா

இணையத்தில் பதுங்கியிருக்கும் அபாயம்: 117 பாலியல் வேட்டையர்கள் கைது, மலேசியாவை அதிரவைக்கும் அதிர்ச்சித் தகவல்

கோலாலம்பூர், மே-15-மலேசியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 117 சிறார் பாலியல் குற்றவாளிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது தெரிந்ததே.

இருப்பினும், இது வெறும் ஆரம்பமே என்றும், இணையத்தின் ஆழத்தில் மறைந்திருக்கும் ஆபத்துகள் இன்னும் அச்சமூட்டுவதாக அமைந்திருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

2024 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், நாடு தழுவிய அளவில் 162 இடங்களில் போலீஸ் தீவிர சோதனைகளை மேற்கொண்டது.

அவற்றில் 117 குற்றவாளிகள் வலைவீசிப் பிடிக்கப்பட்டனர்.

சிறார் பாலியல் சீண்டல் தொடர்பான 205,000-க்கும் மேற்பட்ட ஆபாசக் கோப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ‘Protect and Save the Children’ அமைப்பின் பிரதிநிதி மோகனா தேவி நடேசன், டிஜிட்டல் தளங்கள் குற்றவாளிகளுக்கு ஒரு ‘சுலபமான நுழைவுவாயிலாக’ மாறிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

“முன்பு போல குற்றவாளிகளுக்கு குழந்தைகளுடன் நேரடி அறிமுகம் தேவையில்லை. சமூக ஊடகங்கள், இணையம், இணைய விளையாட்டு, குறுஞ்செய்தி செயலிகள் மற்றும் நேரலைத் தளங்களையே அவர்கள் இப்போது தங்கள் வேட்டைக்களமாகப் பயன்படுத்துகின்றனர்” என அவர் எச்சரித்தார்.

12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 94% பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

குழந்தைகளின் ஆர்வம் மற்றும் அவர்களின் உணர்ச்சி ரீதியான பலவீனத்தைப் பயன்படுத்தி, அந்நியர்கள் பழகும் முறை இப்போது இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த விபரீதத்தைத் தடுக்கத்தான், 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

என்றபோதிலும், சட்டங்களும் சோதனைகளும் ஒருபுறம் இருந்தாலும், இணைய உலகில் குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர்களே முதல் பாதுகாப்பு அரண் என அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் ஒருமித்த குரலில் வலியுறுத்துகின்றனர்.

“சட்ட அமுலாக்கம் மட்டும் போதாது; பெற்றோரின் கண்காணிப்பே குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யும்” என்பதே அனைவரும் முன்வைக்கும் கருத்தாகும்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!