
புத்ராஜெயா, நவம்பர்-2,மலேசியர்கள் தங்களது கடப்பிதழ்களை இணையம் வழியாக 10 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கும் வசதி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
குடிநுழைவு இலாகாவின் MyOnline Passport முறையின் மூலம், 5 அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழைத் தேர்வு அவர்கள் செய்யலாம்.
இதுவரை, 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் கடப்பிதழைப் புதுப்பிக்கும் வசதி குடிநுழைவு இலாகா அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்புதிய வசதி, மலேசியர்கள் தங்களது தேவைக்கேற்ப கடப்பிதழின் செல்லுபடியாகும் காலத்தைத் தேர்வு செய்வதற்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் வழங்கும் எனக் குடிநுழை இலாகா கூறிற்று.
இந்த 10 ஆண்டுக் கடப்பிதழுக்கான கட்டணம் 350 ரிங்கிட்டாகவும், 5 ஆண்டுக் கடப்பிதழுக்கான கட்டணம் 200 ரிங்கிட்டாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இணைய விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரர்கள் MyOnline Passport தளத்தில் நடைமுறையிலுள்ள நிபந்தனைகளைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



