
கோலாலம்பூர், ஜூலை-4 – நாட்டு மக்கள் குறிப்பாக இந்தியர்களுக்குத் தேவை வெறும் வாக்குறுதிகள் அல்ல.
மாறாக, இன்னமும் தீர்க்கப்படாமலிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கான நிரந்தர தீர்வே…
சாக்குபோக்குகள் இனியும் எடுபடாது என, பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்து பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கூறியுள்ளார்.
மடானி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகப்போகின்றன.
ஆனால், இந்தியர்கள் சம்பந்தப்பட்ட பல பிரச்னைகளுக்கு இன்று வரை தீர்வில்லை.
ஜூலை மாதம் வந்து விட்ட போதும், இவ்வாண்டுகான மித்ரா மானியங்களை இன்னும் விநியோகித்தபாடில்லை; அடிப்படை வசதிகளின்றி இன்னும் ஏராளமான தமிழ்ப் பள்ளிகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.
தவிர, இந்தியர்கள் மத்தியில் நகர்ப்புற ஏழ்மை மோசமாகவே உள்ளது; போதிய வேலை வாய்ப்புகள் இல்லை;
கோயில்கள் மற்றும் இந்து இடுகாடு நிலங்கள் பிரச்னைக்கும் உரியத் தீர்வில்லை; உயர் கல்வி வாய்ப்பிலும் இந்திய மாணவர்களுக்கு போதிய இடமில்லை.
இத்தனைப் பிரச்னைகளுக்கும் மத்தியில் ‘அமைதியாகப் பணிபுரியும்’ வியூகத்தின் இரகசியம் தான் என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்குவார்களா என சஞ்சீவன் கேட்டார்.
இந்தியர்களுக்கு உதவுவது என்றால் வெளியில் வாருங்கள், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் சேவையாற்றுங்கள்.
அதைவிடுத்து தேர்தல் காலங்களில் மட்டும் அனுதாபம் தேட முயல வேண்டாமென சஞ்சீவன் கேட்டுக் கொண்டார்.
இந்தியர்களுக்குச் சேவையாற்றுவதில் அமைதியான அணுகுமுறையே தமக்கு வசதியாக இருப்பதாகவும், ஆர்ப்பாட்டம் காட்டாமல் அமைதியாக இருப்பதால் தாம் ஒன்றும் செய்யவில்லை என அர்த்தமில்லை என்றும், பி.கே.ஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் நேற்று கூறியிருந்தது தொடர்பில் சஜ்ஞீவன் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.