
பதவிகள் இல்லாத போதும் நாட்டில் இந்தியர்களின் நலனுக்காக ம.இ.கா. வின் சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக ம.இ.காவின் தேசிய உதவித் தலைவர் தான் ஸ்ரீ எம். ராமசாமி கூறியுள்ளார்.
இந்தியர்களின் நலனுக்காக ம.இ.கா பல்வேறு சேவைகள் மேற்கொண்டு வந்தாலும் கட்சியை குறை கூறும் சிலர் இருக்கவே செய்கின்றனர்.
அவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றும் தங்களின் சேவை தொடரும் என்றும் மாநில ம.இ.கா. தலைவருமான ராமசாமி தெரிவித்தார்.
நேற்று சுங்கை சிப்புட்டில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு 20 மடிக்கணினிகள், கல்வி உதவிகள் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டப் பின்னர் அவர் இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ம.இ.காவை மேலும் சிறந்த நிலைக்கு கொண்டுச் செல்ல கட்சியின் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
அவருக்கு கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தொடரும் என்று ராமசாமி உறுதியளித்தார்.
சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் கல்வி என்பதால், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ம.இ.கா. எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், திறமையான மாணவர்களுக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மூலம் உயர்கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தொழிற்கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக டேப் கல்லூரி, தற்போது TVET கல்வி மையமாக செயல்பட்டு, தொழில்திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ம.இ.கா. இந்திய சமூகத்தின் “ஆலமரம்” போன்ற அமைப்பாக தொடர்ந்து சமூக நலனுக்காக பாடுபட்டு வருவதாகவும், அவ்வைகையில அந்த பங்களிப்பை மக்கள் நினைவில் கொள்வர் எனும் நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.



