Latestமலேசியா

பிறந்த போது மாற்றப்பட்ட இரு பெண்கள் 37 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நெகிழ்ச்சியாக தருணம்

பெய்ஜிங், ஆகஸ்ட்.13-சீனாவில் பிறந்த போதே மாற்றப்பட்ட இரு பெண்கள் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. Huang Xiaoli, Li Hui என்ற அவ்விரு பெண்களும் 1989 அக்டோபர் 3 ஆம் தேதி Guangdongங்கில் உள்ள மருத்துவமனையொன்றில் 55 நிமிட இடைவெளியில் பிறந்தனர். மேலும் வியப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால் அவர்கள் வெறும் 4 கிலோமீட்டர் தூரத்தில் வளர்ந்ததுதான்.

பிறந்த போது தாதிகள் குழந்தைகளைத் தத்தம் தாயாரிடம் சிறிது நேரம் காட்டி மீண்டும் எடுத்துச் செல்லும் இடைவெளியில் குழந்தைகள் மாறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அக்காலத்தில், பிரசவ வார்ட்டில் அடையாளக் கைப்பட்டைகள் இல்லாததால், ஒரே மாதிரியான மருத்துவமனைத் துணிகளுக்குள் செருகப்பட்ட குழந்தைகளின் பெயர் அட்டைகளை மட்டுமே நம்பியிருந்தனர். அத்தவறு கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.

இரு பெண்களும் முற்றிலும் மாறுபட்ட சமூக-பொருளாதாரச் சூழ்நிலைகளில் வளர்ந்தனர்.
Xiaoli வசதியான குடும்பத்தில் வளர்க்கப்பட்டார். இருப்பினும் அவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது அவரது வளர்ப்புத் தந்தைக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் தந்தையும் தாயாரும் விவாகரத்து செய்தனர். இந்நிலையில் மரபணு பரிசோதனை செய்ததில் தம்பதியினர் அவரது உண்மையான பெற்றோர் அல்ல என்பது தெரிய வந்தது. பின்னர் காவல் துறையின் உதவியுடன் தனது உண்மையான குடும்பத்தைக் கண்டுபிடித்தார்.

இவ்வேளையில் மாற்றப்பட்ட மற்றொரு பெண்ணான Li Huiயின் சிறுவயது வாழ்க்கை கஷ்டங்களால் நிறைந்திருந்தது. முதலீட்டு மோசடிக்கு ஆளான குடும்பத்தைக் காப்பாற்ற படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு விட்டு அவர் பல வேலைகளைச் செய்தார். இறுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

அவ்விரு பெண்களும் இறுதியாக ஒரு காபி கடையில் முதல் முறையாகச் சந்தித்தனர். அச்சந்திப்பு பதற்றம், உற்சாகம் மற்றும் சங்கடம் ஆகியவற்றின் கலவையாக இருந்ததாக அவர்கள் விவரித்தனர். தங்கள் வாழ்க்கையையே மாற்றியமைத்த அலட்சியத்திற்குப் பொறுப்பேற்கக் கோரி, அவ்விருவரும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது 2.6 மில்லியன் யுவான் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!