புது டெல்லி, ஆகஸ்ட்-20 – மூன்று நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு, இந்திய அதிபர் மாளிகையில் சடங்குப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அன்வாரை எதிர்கொண்டு வரவேற்றார்.
அன்வாரை கட்டியணைத்து பரஸ்பரம் பரிமாறிக் கொண்ட மோடி, அவரின் கைகளைப் பிடித்தவாறு அழைத்துச் சென்றது கவனத்தை ஈர்த்தது.
இன்று மாலை அன்வார் தலைமையிலான மலேசியப் பேராளர் குழுவும், மோடி தலைமையிலான இந்தியப் பேராளர் குழுவும் சந்தித்து பேசுகின்றனர்.
அதன் போது சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவிருக்கின்றன.
பின்னர் மோடி – அன்வார் இடையில் நேரடி சந்திப்புக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய அதிபர் திரௌபதி முர்முவையும் அன்வார் பின்னர் மரியாதை நிமித்தம் சென்று காண்கிறார்.
2022 நவம்பரில் நாட்டின் பத்தாவது பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து இந்தியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் அலுவல் பயணம் இதுவாகும்.