கோலாலம்பூர், ஆகஸ்ட்-15, வங்காளதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைக் கண்டித்து, கோலாலம்பூரிலுள்ள வங்காளதேச தூதரகத்தின் முன் இன்று அமைதி மறியல் நடத்தப்பட்டது.
காலை 11 மணிக்கு தொடங்கிய அமைதி மறியலில் சமய இயக்கங்கள் உட்பட 35 அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அவ்விஷயத்தில் மலேசியா அமைதி காப்பதாகவும் சாடிய பங்கேற்பாளர்கள், வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் விதமாக புத்ராஜெயா உரக்க குரல் எழுப்ப வேண்டுமென வலியுறுத்தினர்.
அந்நாட்டில் நிலவும் கலவரச் சூழலை முடிவுக்கு கொண்டு வந்து, இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தும் மகஜரும் வங்காளதேச தூதகர அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
‘மனிதநேயத்தை மதியுங்கள்’ (Respect Humanity), அனைவரது உயிர்களும் மதிப்புமிக்கவை (All Lives Matter), இந்துக்களின் உயிரும் முக்கியம் (Hindu Lives Matter) என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி அவர்கள் கோஷமிட்டனர்.
வங்காளதேசத்தில் வெடித்த கலவரங்கள், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்ட பிறகு சிறுபான்மை சமயத்தவர் மீது திசை திரும்பியது.
வங்காளதேச இந்துக்கள், ஷேக் ஹசீனா தலைமையிலான லீகா அவாமி (Liga Awami) கட்சியின் விசுவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்காளதேச மக்கள் தொகையில் சுமார் 8 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 31 லட்சம் பேர் இந்துக்கள் ஆவர்.
அந்த வங்காள விரிகுடா நாட்டில் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மக்களின் நலனும் பாதுகாக்கப்படுமென, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் உத்தரவாதம் அளித்திருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.