
இந்தோனேசியா, ஜனவரி 9 – இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள செமேரு எரிமலை இன்று காலை மீண்டும் வெடித்தது. காலை 7.14 மணிக்கு ஏற்பட்ட இந்த வெடிப்பில், எரிமலை உச்சியிலிருந்து சுமார் 700 மீட்டர் உயரம் வரை சாம்பல் வீச்சு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாம்பல் மேகம் வெள்ளை முதல் சாம்பல் நிறத்தில் காணப்பட்டதுடன், வடமேற்கு திசையை நோக்கி அதிகமாகப் பரவியுள்ளது. இன்று மட்டும் நான்கு முறை வெடிப்புகள் பதிவாகியுள்ளன. அதில் சில வெடிப்புகளில் 600 முதல் 700 மீட்டர் வரை சாம்பல் எழுந்துள்ளது.
தற்போது செமேரு எரிமலை எச்சரிக்கை நிலை அபாயகரமான சூழலில் உள்ளது. உச்சியிலிருந்து 13 கிலோமீட்டர் வரை சில பகுதிகளில் மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எரிமலைக் குழியிலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் எந்த நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படவில்லை.
சூடான பாறை ஓட்டங்கள், லாவா சரிவு அபாயங்கள் இருப்பதால், மக்கள் ஆறுகளின் அருகே செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



