Latestமலேசியா

இனவாதத்துக்கு சமூகத்தில் இடமில்லை – கோபிந்த் சிங் நினைவுறுத்து

கோலாலம்பூர், பிப்ரவரி-17 – நாட்டில் இனவாதமும், இனங்களுக்கிடையிலான பாகுபாடும் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தமளிப்பதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

இனவாதமான செயல்களும், வார்த்தைகளும் நாட்டின் ஒற்றுமையைச் சீர்குழைக்கும்; எனவே அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றார் அவர்.

சோளம் விற்பவர், இந்தியர்களை கீழ்த்தரமாக அடையாளப்படுத்திய வைரல் சம்பவம் தொடர்பில் அமைச்சர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியச் சமூகத்தை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திய அச்சம்பவம் விரைவாக விசாரிக்கப்பட வேண்டுமென்றும் கோபிந்த் வலியுறுத்தினார்.

இன, மத, மொழி வேறுபாடின்றி ஒவ்வொரு தனிமனிதனும் இந்நாட்டில் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்; இதற்கு மலேசியர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

ஒற்றுமையும், பரஸ்பர மரியாதையும் மலேசியர்களை வழிநடத்தும் முக்கியக் கொள்கையாக அமைந்தால் மட்டுமே வளமான, சுபிட்சமான நாடாக மலேசியா தொடர்ந்து நிலைக்க முடியும் என்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

சிலாங்கூர், செப்பாங்கில் சாலையோரம் சோளம் விற்கும் மலாய்க்கார குடும்பம், இனவெறியிலான அறிவிப்பு அட்டையை வைத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

“இங்கு கெலிங்கிற்கு சோளம் கிடையாது” என அநாகரீகமாக அறிவிப்பு வைக்கப்பட்டதற்கு சமூகத்தில் கடும் கண்டனம் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!