
கின்ஷாசா, மே 18 – காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவியுள்ள எபோலா வைரஸ் தொற்றால் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை என்ற நிலையில் உலக சுகாதார அமைப்பு ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக நிலையில் சுகாதார அவசரநிலையை அறிவித்தது.
கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசின் முக்கிய நகரமான கோமாவில், ( Goma) ஒருவருக்கு தொற்று இருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புனியாவில் எபோலா நோயால் இறந்த ஒருவரின் மனைவி, தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு, ஏற்கெனவே நோய்த்தொற்றுடன் கோமாவுக்குப் பயணம் செய்துள்ளார் என்று காங்கோ தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (INRB) இயக்குநர் பேராசிரியர் ஜீன்-ஜாக்ஸ் முயெம்பே, ( Jean -Jacques ) தெரிவித்தார்.
அறிவிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom )தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.
இந்தத் தொற்றுநோய், அனைத்துலக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாகும் என X- தளத்தில் அவர் பதிவிட்டார்.
மிகவும் எளிதில் பரவக்கூடிய ரத்தக்கசிவு காய்ச்சலால் இதுவரை மொத்தம் 88 இறப்புகளும், 336 பேருக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC Africa) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
(MSF) என்ற மருத்துவ உதவிக் குழு, நோய்ப் பரவலின் விரைவான பரவலைக் கண்டித்து, ஒரு பெரிய அளவிலான நடவடிக்கைக்கு” தயாராகி வருவதாகக் தெரிவித்துள்ளது.



