
கோலாலம்பூர்,ஜூன்-15-அம்பாங் ஜெயா நகரான்மைக் கழகத்தின் விண்ணப்பத்தை கடந்த வாரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அங்கீகரித்ததைத் தொடர்ந்து நீண்ட காலமாக கைவிடப்பட்ட ஹைலண்ட் டவர்ஸ் அடுக்கு மாடி குடியிருப்பின் இரண்டு கட்டிடங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் உடைக்கப்படும்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்டுக் கிடக்கும் அந்தக் கட்டிடங்களை இடிப்பதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு அனுமதிக்கிறது என்று அம்பாங் ஜெயா நகரான்மைக் கழகத்தின் துணைத் தலைவர் ஹஸ்ருல்நிஷாம் ஷாரி ( Hazrolnizam Shaari ) தெரிவித்தார்.
கட்டுமான நிறுவனம் மற்றும் திவால்நிலைத் துறையால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஹைலண்ட் டவர்ஸ் வீட்டு உரிமையாளர்களுடன் அம்பாங் ஜெயா நகரான்மைக் கழகம் ஒரு கூட்டத்தை நடத்தும் என்று அவர் கூறினார்.
இதுவே ஒப்புக்கொள்ளப்பட்ட நோக்கம் என்பதில் அனைத்துத் தரப்பினரும் தெளிவாக இருப்பதால், இந்த செயல்முறைக்கு அதிக காலம் எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இடிப்புப் பணி இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என்று Hazrolnizam தெரிவித்தார். இடிப்புப் பணிக்கான பொறுப்பாளர்களை நியமிப்பது உட்பட, அதற்கான ஏற்பாட்டுப் பணிகளில் அம்பாங் ஜெயா நகரான்மைக் கழகம் ஈடுபட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம்தேதியன்று , ஹைலேண்ட் டவர்ஸில் உள்ள 13 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று, மழையால் ஏற்பட்ட மண் அரிப்பு மற்றும் வெடித்த திசைமாற்றுக் குழாய் காரணமாக இடிந்து விழுந்த சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர்.
அந்த பேரிடருக்குப் பிறகு 2 ஆவது மற்றும் மூன்றாவது தொகுதியிலுள்ள குடியிருப்பு கட்டிடங்களிலிருந்து குடியிருப்புவாசிகள் வெளியேற்றப்பட்டனர்.



