பாயான் லெபாஸ், மே 23 – பினாங்கு, பாயான் லெபாஸ், கெனாரி அவென்யூவிலுள்ள, பீட்சா உரிம வாணிப உணவகம் ஒன்று வெளியிட்டதாக கூறப்படும் இஸ்லாத்தை அவமதிக்கும் ரசீது தொடர்பில், விசாரணைக்காக இதுவரை நால்வர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில், தம்பதி உட்பட மூவர் மியன்மார் நாட்டவர்கள். எஞ்சிய ஒருவர் உள்நாட்டு ஆடவர் என்பதை, பாராட் டாயா போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் கமரூல் ரிசால் ஜெனால் உறுதிப்படுத்தினார்.
சுங்கை அராவில், டுரியா தோட்டத்திலுள்ள குடில் ஒன்றிலிருந்து அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களில், 19 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட மியன்மார் நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட டுரியான் தோட்டத்தின் பணியாளர்கள் ஆவர். 67 வயது உள்நாட்டு ஆடவர், அந்த தோட்டத்தின் உரிமையாளர் என கமருல் சொன்னார்.
மியன்மார் நாட்டவர்கள் மூவரும், விசாரணைக்காக ஜூன் மூன்றாம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளை ; உள்நாட்டு ஆடவர், போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அச்சம்பவம் தொடர்பில், இதுவரை 17 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, அச்சம்பவம் தொடர்பில், இரு உணவக பணியாளர்கள் உட்பட எட்டு பேரிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.