
கோலாலம்பூர் – மார்ச் 25 – தற்போது உணவகத் தொழில்துறையில் வேலை செய்வதற்கு கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை நீடிப்பதால் அதனை தீர்ப்பதற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம் மற்றும் மலேசிய இந்திய முஸ்லீம் உணவக சங்கங்களான பிரெஸ்மாவும் பிரிமாசும் கூட்டாக கோரிக்கை எழுப்பியுள்ளன. அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்தோம்.
இதனை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியிருந்தார். தொழிலாளர்கள் பற்றாக்குறையால் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்களும் , இந்திய முஸ்லீம் உணவக உரிமையாளர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே இந்த பிரச்னையை தீர்ப்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி மற்றும் பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி ஆகியோர் கூட்டாக அறைகூவல் விடுத்தனர்.
பல உணவகங்கள் தொழிலாளர் பற்றாக்குறையினால் மூடும் சூழ்நிலையை எதிர்நோக்கி வருவதால் இந்த விவகாரத்தில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி கேட்டுக்கொண்டார்.
கோலாலம்பூரில் பிரெஸ்மா ஏற்பாட்டில் இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட டத்தோ ஜவஹர் அலியும் உணவகங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அவர்கள் ஒப்பந்த காலம் மீறி சொந்த நாட்டிற்கு செல்லும்போது அவர்களுக்கு பதிலாக அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்கு அரசாங்கம் உடனடி அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
நாட்டிற்கு வரும் சுற்றுப் பயணிகள் உட்பட அனைத்து மக்களுக்கும் சேவைத்துறையில் உணவகங்கள் முக்கிய பங்காற்றி வருவதால் அந்த தொழில்துறையின் தேவைகளை நிறைவு செய்வதில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என பிரெஸ்மா மற்றும் பிரிஸ்மா ஆகிய இரு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் கேட்டுக் கொண்டனர்.
உணவகத் தொழில்துறையின் மூலம் அரசாங்கத்திற்கு கணிசமான வருமானம் கிடைப்பதால் உணவக உரிமையாளர்கள் எதிர்நோக்கும் தொழிலாளர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு தேவையென இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெரும்பாலான உணவக உரிமையாளர்களும் வலியுறுத்தினர்.