
புத்ராஜெயா, நவம்பர்-4,உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் சவால்களைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த அனைத்து அமைச்சுக்களும் தங்களது சேவை தொடர்ச்சித் திட்டங்களை (BCP) உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட தேசிய பாதுகாப்பு குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சுக்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சேவைத் தலைவர்களுடன் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியப் பிறகு, ஃபேஸ்புக் பதிவில் தான் ஸ்ரீ Shamsul Azri bin Abu Bakar அவ்வாறு கூறினார்.
வழக்கமான அச்சுறுத்தல்களைத் தாண்டி இணையப் பாதுகாப்பு, நாசவேலைகள், தவறான தகவல்கள் மற்றும் விநியோகச் சங்கிலித் தடங்கல் போன்ற புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, தகவல் தொடர்பு, எரிசக்தி, போக்குவரத்து மற்றும் முக்கியக் கட்டமைப்பு வசதிகளில் எவ்விதத் தடையுமின்றி அரசாங்கத்தின் சேவைகள் தொடருவதை உறுதிச் செய்ய அனைத்து இலாகாக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அதோடு, அவசரகால நடவடிக்கைகளுக்கான செயல்திறனையும் உயர்த்த வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படாது…இதுவே அரசாங்கத்தின் உயரிய முன்னுரிமை என்றார் அவர்.



