
கோலாலம்பூர், நவம்பர்-4,பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற PTPTN முன்னாள் கடன் பெறுநர்களுக்கு, கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் கொள்கையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவுள்ளது.
இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிஸான் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த மறுஆய்வு, முன்னாள் கடன் பெறுநர்களுக்கு நியாயம் வழங்குவதுடன், நாட்டின் கல்வி நிதித் திட்டம் நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து செயல்படுவதை உறுதிச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் மக்களவையில் கூறினார்.
2025-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்னர் PTPTN கடன் பெற்ற மாணவர்களின் பழைய ஒப்பந்தங்களில், முதல் வகுப்பு பட்டம் பெற்றால் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக, Stampin நாடாளுமன்ற உறுப்பினர் Chong Chieng Jen முன்னதாக சுட்டிக்காட்டினார்.
எனவே, புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை, ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்கு இந்த விலக்கைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, மாதம் 2,500 ரிங்கிட் வரை வருமானம் பெறும் PTPTN கடன் பெறுநர்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்கலாம்.
2,501 முதல் 3,000 ரிங்கிட் வரை மாத வருமானம் பெறுவோர், குறைந்தபட்சம் 50 ரிங்கிட் மாதத் தவணையாகச் செலுத்த வேண்டும்.
தவிர, நிலுவைத் தொகையின்றித் தவறாமல் கடனைச் செலுத்துவோருக்கு 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



