கோலாலம்பூர், ஜூலை 19 – தகவல் தொழிற்நுட்ப செயல் இழப்பு மற்றும் அதில் ஏற்பட்ட கோளாறினால் உலகாளவிய நிலையில் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் விமான நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், பேரங்காடிகள் , வங்கிகள் தொலை தொடர்பு, விமான நிலையங்களுக்கான ரயில் சேவைகள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
பல விமான நிறுவனங்களின் தானியங்கி சேவைகள் செயல்படாத காரணத்தினால் ஊழியர்களே மெனுவல் முறையில் அனைத்து பணிகளையும் மேற்கொள்கின்றனர். விமான பயணிகளுக்கு வழங்க வேண்டிய பயணச் சீட்டு கணினிகளால் அச்சிட முடியாத நிலை ஏற்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் அச்சிடப்படாத காலி போர்டிங் பாஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்டதோடு அதில் பயணிகள் தங்களது விவரங்களை எழுதிக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டனர்.
தகவல் தொழிற்நுட்ப செயலிழப்புக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பல நிறுவனங்கள் குறைகூறியுள்ளன. தனது சேவையில் ஏற்பட்டுள்ள செயல் இழப்பை சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியிருந்தது.
பல நாடுகளில் விமான நிலையங்களில் பயணிகள் உடனடியாக தங்களது பரிசோதனைகளை முடித்துக்கொள்வதில் ஏற்பட்ட சிரமத்தினால் முகப்பிடங்கள் விரைவான சேவைகளை வழங்க முடியவில்லை. கே .எல்.ஐ.ஏ விமான நிலையத்தின் 2ஆவது முனையத்தில் ஏர் ஆசியா பரிசோதனை மையங்களின் முகப்பிட சேவையும் உலகாளவிய தகவல் தொழிற்நுட்ப கோளறினால் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியது.
கே.எல்.ஐ.ஏ பயணிகள் முனையத்தில் பயணிகள் முகப்பிட சேவையில் கட்டாயமாக Manual பரிசோதனையை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகினர். இதனால் விமான நிலைய செயல்பாடு மிகவும் மோசமாகவும் மந்தமாகவும் இருந்தன. இன்று பிற்பகல் மணி 2.42 முதல் கே.எல்.ஐ.ஏ வில் தகவல் தொழிற்நுட்ப நெருக்கடி ஏற்பட்டதால் பயணிகளில் பலர் இணைய வாயிலாக முகப்பிட சேவைகளில் பரிசோதனை செய்ய முடியவில்லையென தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். கே.எல்.ஐ.ஏ விரைவு ரயில் சேவை நிறுவனத்தில் தனது செயலி, அகப்பக்கம் மற்றும் digital wallets மூலம் டிக்கெட் வாங்க முடியாமல் பயணிகள் தவித்தனர். ஏர் ஆசியா, மலேயன் ரயில்வே உட்பட பல நிறுவனங்கள் ஏற்பட்ட சிரமத்திற்காக பயனீட்டாளர்களிடம் மன்னிப்பு கோரினர்.
கிளவுட் ( Cloud ) சேவைகள் செயலிழப்பால் குறைந்த செலவில் செயல்படும் பல விமான நிறுவனங்களின் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக மைப்ரோசோப்ட் நிறுவனம் தெரிவித்தது.
தகவல் தொழிற்நுட்ப செயலிழப்பினல் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய விமான நிலையம் மற்றும் தேசிய ஒலிபரப்பு நிறுவனமும் பாதிப்பை எதிர்நோக்கின. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலும் தகவல் தொழிற்நுட்ப செயல் இழப்பினால் Manual முறையில் செயல்பட்டதால் பயணிகள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கினர்.
மேலும் சிங்கப்பூர் உள்ளூர் நிறுவனங்களான DBS, Singtel, M1 மற்றும் Grab சேவைகளும் பாதிக்கப்பட்டன. வின்டோஸ் மென்பெருள் மூலம் இயங்கும் கருவிகளில் சமூக ஊடகத் தளங்களை பயன்படுத்த முடியவில்லை என சிங்கபூர் பயனர்கள் புகார் தெரிவித்தனர்.