
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – உலகின் மிகத் தொன்மை வாய்ந்த 10 மொழிகளில் தமிழ் முன்னணி வகிப்பதை, பிரசித்திப் பெற்ற Journal of Emerging Technologies and Innovative Research ஆய்விதழ் மறு உறுதிப்படுத்தியுள்ளது.
5,000 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான இலக்கிய பாரம்பரியத்துடன், தமிழ் மொழி உலகளவில் தனித்துவம் பெற்றுள்ளது.
டிராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த தமிழில் சங்கக் காலக் கவிதைகள், தத்துவ நூல்கள், மதப்பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள் உருவாகி, இன்று வரை பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த ஆய்விதழ், தமிழின் ஆழமான பண்பாட்டு வேர்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகில் பல பண்டைய மொழிகள் அழிந்துவிட்ட நிலையில், தமிழோ அன்றாடப் பேச்சு, இலக்கியம், ஊடகம் ஆகிய துறைகளில் இன்னும் சிறப்போடும் செழிப்போடும் பயன்படுத்தப்படுவதையும் அது குறிப்பிட்டது.
இன்று உலகம் முழுவதும் 7 கோடியே 50 இலட்சம் பேருக்கு மேல் தமிழ் மொழியைப் பேசி வருகின்றனர். உலகின் 10 தொன்மை மொழிகளில் தமிழுக்கு அடுத்து சமஸ்கிரதம் உள்ளது. இப்பட்டியலில் இந்திய மொழிகளில் தமிழும் சமஸ்கிரதமும் மட்டுமே இடம்பிடித்துள்ளன.
மூன்றாவது இடத்தை 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிரேக்க மொழியும், நான்காமிடத்தை சீனர்கள் பேசும் மாண்டரின் மொழியும் பிடித்துள்ளன.
அரபு மொழி ஆறாமிடத்தையும், பாரசீக மொழி எட்டாமிடத்தையும், லத்தின் மொழி ஒன்பதாமிடத்தையும் பிடித்துள்ளன. 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஜப்பானிய மொழி பத்தாவது இடத்தில் உள்ளது.