
பாங்கி, அக்டோபர்-13,
ஊழலைத் துடைத்தொழிக்காவிட்டால் மலேசியாவும் நேப்பாளத்தில் நடந்த கலவரம் போன்ற நிலையைச் சந்திக்க வேண்டி வரும் என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தலைவர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி எச்சரித்துள்ளார்.
நேப்பாள இடைநிலைப் பள்ளி மாணவர் அபிஸ்கர் ரவுத் (Abiskar Raut) அளித்த உரையே கடைசியில் அந்நாட்டு அரசை வீழ்த்தியது என, பாங்கி UKM பல்கலைக்கழகத்தில் ஊழல் தடுப்பு தொடர்பில் நடைபெற்ற பட்டிமன்ற போட்டியில் சிறப்பு விருந்தினராக பேசும்போது அவர்
கூறினார்.
“நாங்களே அந்த இருளை எரிக்கும் நெருப்பு, அநீதியை சுழற்றி அழிக்கும் புயல்” என அபிஸ்கர் பேசிய வார்த்தைகளே ஊழலுக்கு எதிராக மாணவர்கள் சாலை ஆர்ப்பாட்டங்களில் இறங்க வழி வகுத்தது என அசாம் பாக்கி சுட்டிக் காட்டினார்.
நேப்பாளத்தில் ஊழல் மற்றும் அநீதி எதிர்ப்பு போராட்டங்களில் 72 பேர் உயிரிழந்தனர்.
அரசாங்கக் கட்டடங்கள், நீதிமன்றங்கள், நாடாளுமன்றம், தலைவர்களின் வீடுகள் பற்றி எரிந்தன.
அந்நாட்டு நிதியமைச்சரும் ஓட ஓட விரட்டப்பட்டு தாக்கப்பட்டார்; கடைசியில் வேறு வழியின்றி பிரதமர் ராஜினாமா செய்தார்.
“மலேசியாவில் ஊழல் கட்டுக்குள் இருந்தாலும், இப்படியான நிலை இங்கு வராமல் நாம் தடுக்க வேண்டும்” என அசாம் பாக்கி நினைவுறுத்தினார்.