சிங்கப்பூர், ஜூன் 16 – சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை இரு கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் செந்தோசா உல்லாசத் தீவின் கடற்கரையின் பெரும்பகுதி மூடப்பட்டன. அங்கு கடல் சம்பந்தப்பட்ட உல்லாச நடவடிக்கைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டன. இரண்டு கப்பல்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் விளைவாக எண்ணெய் கசிவு கடல் நீரில் கலந்தது குறித்து செந்தோசா தீவை நிர்வகிக்கும் Sentosa Development Corp வெள்ளிக்கிழமை எச்சரிகை விடுத்திருந்தது. மேலும் அந்த தீவில் உள்ள சுமார் 2,000 குடியிருப்பு வாசிகளுக்கும் எண்ணெய்க் கசிவு தொடர்பான நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.
செந்தோசா தீவின் இதர கடற்கரைப் பகுதியிலும் எண்ணெய் கசிவு பரவியதை தொடர்ந்து அங்கு தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Pasir Panjang முனையத்தில் நெதர்லாந்து கொடி ஏற்றியிருந்த Vox Maxima கப்பல் சிங்கப்பூர் கப்பலுடன் மோதியதைத் தொடர்ந்து சேதத்திற்குள்ளான கொள்கலன் கப்பல் ஒதுக்குப்புறமான பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்டது. Tanjung Beach கடற்கரை பகுதியில் சனிக்கிழமை காலையில் பெட்ரோல் எண்ணெய் கசிவின் மணம் வீசியதாகவும் கடற்கரை மணல் மற்றும் அருகேயுள்ள பாறைகளில் கருப்பெண்ணெய் கசிவுகள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டது.