
கசான், ஜூன்-19-மலேசியாவுக்கு நீண்ட கால அடிப்படையில் பெட்ரோல், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை தடையின்றி வழங்குவதற்கு ரஷ்யா உத்தரவாதம் அளித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் கசான் (Kazan) நகரில் நடைபெற்ற ஆசியான்-ரஷ்யா நினைவு உச்ச நிலை மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், இந்த உடன்பாடு நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு பெரும் நிச்சயத்தன்மையை வழங்கும் என்றார்.
ஒவ்வோர் ஆண்டும் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஒப்பந்தங்களை புதுப்பிக்கும் நிலைக்கு இனி அவசியமிருக்காது என்றார் அவர்.
இந்த ஒத்துழைப்புக்கான கொள்கை ரீதியான வரைவுத் திட்டம் ஏற்கனவே தயாராக உள்ளதால், மலேசியா திரும்பியதும் அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கூறினார்.
நாட்டின் தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்து பேசிய அன்வார், மலேசியாவில் தற்போது டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறை இல்லை என்றும், உபரியாக உள்ள டீசலை தீமோர் லெஸ்தே போன்ற தேவைப்படும் நாடுகளுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயன்று வருவதால் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.



