சென்னை, அக்டோபர் -6, தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாகவும் அரசாங்கப் பள்ளியில் பிற்போக்குத்தனமாகவும் பேசியதாகக் கூறி கைதுச் செய்யப்பட்ட பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மஹா விஷ்ணு சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார்.
புழல் சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியான மஹா விஷ்ணுவை, அவரின் தீவிர ஆதரவாளர்கள் திரண்டு நின்று, மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் பூக்களை தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.
பலர் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
முன்னதாக அரசுப் பள்ளி நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளின் குறைபாடுகளுக்கு அவா்கள் முற்பிறப்பில் செய்த பாவம்தான் காரணம் என்று அவா் பேசியது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஊனமுற்றோா் உரிமைகள் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் மகா விஷ்ணு மீது போலீசில் புகார் செய்யப்பட்டன.
மஹா விஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளைக்கு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கிளைகள் உள்ளன.