கோலாலம்பூர், ஆகஸ்ட் -31,
சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பது வெறும் உற்சாகமளிக்கும் முழக்கம் அல்ல; அதற்கும் மேலானது.
உண்மையிலேயே உணரப்பட்டு, அதன் வேட்கை உளமார பூர்த்திச் செய்யப்பட வேண்டும் என, 67-வது தேசிய தின வாழ்த்துச் செய்தியில் தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
Malaysia Madani: Jiwa Merdeka என்ற இவ்வாண்டுக்கான தேசிய தினக் கருப்பொருளுக்கு ஏற்ப, தேசிய ஒருமைப்பாட்டு கோணத்தில் சுதந்திர உணர்வை நாம் புரிந்து, ஆழமாக ஆராய்ந்து, கூட்டாக அனுசரிப்போம் என்றார் அவர்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், தனது முதன்மைக் கோட்பாடாக ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்கிறது.
பல்லின மக்கள் வாழும் பெருமைமிகு மலேசியாவின் முக்கியத் தூணாக விளங்கும்
இந்த ஒற்றுமை, இந்த 67 ஆண்டுகளில் நாட்டை மேலும் நிலைத்தன்மையாகவும் வலுவாகவும் மாற்றியுள்ளது.
எத்தனைச் சவால்களை எதிர்கொண்டாலும், இன ஒற்றுமை எப்போதும் தேசத்தின் அஸ்திவாரமாக இருப்பதை நாம் அனைவரும் உறுதிச் செய்ய வேண்டும்மென, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
நாட்டின் எதிர்கால நலன், செழிப்பு மற்றும் வளப்பத்திற்கான அனைத்து தொலைநோக்கும் வெற்றியடைய, ஒரு பெரிய குடும்பமாக நாம் ஒருவருக்கொருவர் கைகோர்த்து செயல்பட வேண்டுமென டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.