
கோலாலம்பூர், மே-11-மலேசிய இஸ்லாமிய சமய மேம்பாட்டுத் துறையான JAKIM-மின் ஹலால் சான்றிதழ் பெற்றுள்ள அனைத்து நிறுவனங்களும், இனி முழுநேர ஹலால் அதிகாரிகளை (Halal Executives) நியமிப்பதைக் கட்டாயமாக்க, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி பரிந்துரைத்துள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த நடவடிக்கை ஒரு ‘முன்னெச்சரிக்கை தடுப்பு முறையாக’ அமையும் என்றார்.
உயர் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற தகுதியானவர்களை ஹலால் அதிகாரிகளாக நியமிப்பதன் மூலம், அன்றாடச் செயல்பாடுகளில் ஷரியா விதிமுறைகள் மீறப்படுவதைத் தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அதிகாரிகள் மட்டுமன்றி, ‘ஹலால் தணிக்கையாளர்’ எனும் புதிய முறையை அறிமுகப்படுத்தவும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
இவர்கள் சமையலறை செயல்பாடுகளைத் தாண்டி, நிறுவனங்களின் விளம்பரங்கள், பொட்டலமிடுதல் மற்றும் டிஜிட்டல் தளங்களில் ஹலால் தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிச் செய்வார்கள்.
மலேசியாவின் ஹலால் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
துணைப் பிரதமரின் இப்பரிந்துரை விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



