
கோலாலம்பூர், மே-11- செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக்கின் முன்னாள் உதவியாளரான எட்மண்ட் தியோ ( Edmund Teoh) செபுத்தேவில் உள்ள பள்ளிகளுக்கான விவேக ஸ்மார்ட் போர்டுகளைக் கொள்முதல் செய்தது தொடர்பான இரண்டு மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.
தற்போது ஒரு P-hailing நிறுவனத்தில் பணிபுரியும் தியோ, இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி சுசானா ஹுசைன் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்து விசாரணை கோரினார்.
முதல் குற்றச்சாட்டின்படி, செபுத்தே தொகுதியில் 16 பள்ளிகள் விண்ணப்பித்திருந்ததை அறிந்திருந்தபோதிலும், இரண்டு பள்ளிகள் மட்டுமே விவேக போர்டுகளுக்கான பங்களிப்புக்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறி கோக்கை ஏமாற்றியதாக தியோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த ஏமாற்றுவேலையின் காரணமாக, செபுத்தே நாடாளுமன்றத் தொகுதிக்கான ‘புராஜெக் மெஸ்ரா ரக்யாட் திட்டத்தின் கீழ், ‘மைக்காஸ்’ (MyKhas) அமைப்பு மூலம் பங்களிப்புக்கான விண்ணப்பத்தை கோக் அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் குற்றப் பத்திரிகையில் கூறப்படுகிறது.
இரண்டாவது குற்றச்சாட்டில், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம்தேதி கூச்சாய் லாமாவில் உள்ள ஜாலான் கூச்சாய் மாஜூவில் அமைந்துள்ள ஒரு ஷெல் பெட்ரோல் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில், அய்னுடின் அமினுதீன் என்பவரிடமிருந்து 500,000 ரிங்கிட் ரொக்கப் பணத்தை ஊழல் ரீதியாகப் பெற்றதாக தியோ மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
தியோவுக்கு 60,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட்டதோடு அவர் தனது கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என்பதோடு மாதந்தோறும் ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் ஆஜராகவும் நீதிபதி சுசனா உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 3-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.



