கோலாலம்பூர், ஜூலை 11 – நாட்டில் கடந்த ஆண்டில் தடுப்புக் காவலில் 74 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 22 மரணங்கள் போலீஸ் லோக்கப்பிலும் 12 மரணங்கள் தடுப்பு முகாம்களிலும் , 10 இறப்புகள் போலீஸ் தடுப்பு காவலிலும் நிகழ்ந்துள்ளதாக பிரதமர் துறை தெரிவித்துள்ளது. சுங்கை ஊடாங் சிறைத் துறையில் நால்வரும் , குளுவாங் சிறையில் மூன்று மரணங்களும் நிகழ்ந்துள்ளன. வங்சா மாஜூ போலீஸ் மாவட்டத்தில் காஜாங் சிறை, பெர்லீஸ் மற்றும் தாப்பா தடுப்பு நிலையத்தில் தலா ஒரு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுதவிர குடிநுழைவு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்களில் 41பேர் உயிரிழந்தனர். அவர்களில் 37 ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறார்களும் அடங்குவர். பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மியன்மார், தாய்லாந்து ,இந்தியா ,பாலஸ்தீன் , வெனுசுவலா உட்பட மேலும் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் மரணம் அடைந்ததாக பிரமர் துறை வெளியிட்ட பதிலில் தெரிவித்துள்ளது.
குடிநுழைவு தடுப்பு முகாம்களில் 24 மரணங்களும் மருத்துவமனைகளில் 17 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. நிமோனியா, இருதய செயல் இழப்பு , உடல் உறுப்புக்களின் உள்ளே இரத்தக் கசிவு காரணமாகவும் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டில் தடுப்புக் காவலில் ஏற்பட்ட மரணங்கள், கொலைக் குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணம் விளைவித்தததற்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து சிகமாட் பக்காத்தான ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு பிரதமர்துறை வழங்கிய பதிலில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.