Latestமலேசியா

கண்ட இடங்களில் மேயும் கால்நடைகளுக்கு இனி அடையாள பட்டை கட்டாயம்; ஜோகூர் அரசு அதிரடி

இஸ்கண்டார் புத்ரி, ஜூலை-10, ஜோகூரில் சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகள் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும், அடையாள பட்டை (tag) அணிவிப்பதை மாநில அரசாங்கம் விரைவிலேயே கட்டாயமாக்கவுள்ளது.

கால்நடைகளை, கட்டவிழ்த்து, அவற்றின் போக்கில் மேய்ச்சலுக்கு விட்டுச் செல்வது ஒரு நீண்ட கால பிரச்னையாக இருந்து வருகிறது.

மேய்ப்பவர் இல்லாமல் சுற்றித் திரியும் கால்நடைகளால் மரண சாலை விபத்துகள் நிகழுவதும் தொடர்கதையாகி விட்டது.

அதனைக் கையாளும் விதமாகவே அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறைக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ மொஹமட் ஜாஃப்னி ஷுக்கோர் (Datuk Mohd Jafni Shukor) தெரிவித்தார்.

கால்நடைகள் விபத்தில் சிக்கினால் அவற்றின் உரிமையாளர்களைக் கண்டறிய அந்த அடையாள பட்டை உதவியாக இருக்குமென டத்தோ ஜாஃப்னி சொன்னார்.

தொடக்கக் கட்டமாக மெர்சிங் மாவட்டத்தில் அவ்விதிமுறை அமுலுக்கு வரும்.

பின்னர் மற்ற மாவட்டங்களுக்கும் அது விரிவுப்படுத்தப்படுமென்றார் அவர்.

மெர்சிங்கில் கண்ட இடங்களில் மேயும் மாடுகளால் விபத்துகள் ஏற்பட்டு சாலைப் பயனர்கள் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்கள் குறித்து பேசுகையில் அவர் அவ்வாறு சொன்னார்.

மெர்சிங்கில் கடந்தாண்டு மட்டும் ஒரு மரணத்தை உட்படுத்திய அத்தகைய 63 விபத்துகள் பதிவாகின.

இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் அது போன்று 40 சம்பவங்கள் பதிவாகி, ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!