
புத்ராஜெயா, ஜூலை-4 – கற்பழிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படும் வயது குறைந்த பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள சமூக நலத் துறையான JKM தயாராக உள்ளது.
அப்பொறுப்பைச் சுமக்கும் பொருத்தமான அல்லது தகுதியான குடும்ப உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில், JKM தன் பொறுப்பில் அதனை எடுத்துக் கொள்ளும்.
மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்சி ஷுக்ரி அதனைத் தெரிவித்தார்.
பிள்ளைகளின் பாதுகாப்பானது கூட்டுப் பொறுப்பாகும்; மொத்த சமூகமும் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றார் அவர்.
காதலியின் வயது குறைந்த பெண் பிள்ளையை கற்பழித்ததாக, நாசி லெமாக் வியாபாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறித்து அமைச்சர் கருத்துரைத்தார்.
இது போன்ற கொடுமையான சம்பவங்கள் கவலையளிக்கின்றன; சிறார்களின் பாதுகாப்பு மற்றும் தன்மானத்தை மதிக்கும் எந்தச் சமூகமும் இதனை அனுசரித்துப் போகாது.
எனவே, சிறார்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து தகவல் தெரிந்தோர் நமக்கென வந்தது என அமைதிக் காக்காமல், 15999 எண்களில் Talian Kasih அழைப்புச் சேவை நாடலாம், அல்லது அருகிலுள்ள JKM அலுவலகங்களை நாடலாமென அமைச்சர் கூறினார்.
கடந்தாண்டு 12 வயது சிறுமியை கற்பழித்ததன் பேரில், அந்த நாசி லெமாக் வியாபாரியும், அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் சொந்த தாயும், இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.