
மாலே , மே-19-மாலத்தீவின் மிக மோசமான டைவிங் எனப்படும் முக்குளிப்பு பேரழிவில் நீரில் மூழ்கிய நான்கு இத்தாலியர்களின் உடல்கள், அனைத்துலக மீட்பு முயற்சிக்குப் பிறகு, திங்களன்று நீருக்கடியில் உள்ள குகையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மாலத்தீவு மற்றும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழனன்று இந்தியப் பெருங்கடலில் உள்ள சுற்றுலாத் தலத்தில் டைவிங் செய்த ஐந்து இத்தாலியர்கள் கொண்ட குழு திரும்பத் தவறிய நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் அவை இன்னும் மீட்கப்படவில்லை.
வியாழனன்று மற்றொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டது, அதே நேரத்தில் சனிக்கிழமை தேடுதல் பணியின் போது மேற்பரப்பிற்கு வந்த மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை மீட்பாளர் ஒருவர், அழுத்தக்குறைவு தொடர்பான சிக்கல்களால் உயிரிழந்தார்.
மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை டைவர் சார்ஜென்ட் முகமது மஹுதியின்
( Mohamed Mahudhy )மரணத்திற்குப் பிறகு தேடுதல் பணி இடைநிறுத்தப்பட்டது, ஆனால் இத்தாலி, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் உதவியுடன் திங்களன்று மீண்டும் தேடும் பணி தொடங்கப்பட்டது.
அனைத்துலக டைவிங் பாதுகாப்பு குழுவான டைவர்ஸ் அலர்ட் நெட்வொர்க்கைச் சேர்ந்த மூன்று பின்லாந்து நிபுணர்களும் இதில் ஈடுபட்டனர்.
காணாமல் போன நான்கு டைவர்களின் உடல்கள், வாவு அட்டோல் ( Vaavu Atol ) குகைக்குள் ஒரு கூட்டுத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.



