புத்ரா ஜெயா, மே 13 – காலாவதியான கடப்பிதழை வாங்கி அவற்றை போலியாக்கும் கும்பலை குடிநுழைவுத்துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர். இந்த கும்பலின் முதுகெலும்பாக செயல்பட்ட 38 வயதுடைய வங்காளதேச ஆடவனை குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்தனர். காலாவதியான கடப்பிதழ்களை பொதுமக்களிடமிருந்து 1,000 ரிங்கிட் முதல் 1,500 ரிங்கிட்வரை அவற்றை வாங்கி அதிலுள்ள தகவல்களை மாற்றிய பின் பயண ஆவணங்கள் இல்லாத வெளிநாடுகளின் பிரஜைகளுக்கு போலி கடப்பிதழ் தயாரிக்கும் நடவடிக்கையில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக அக்கும்பல் ஈடுபட்டு வந்ததாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ Ruslin Jusoh தெரிவித்தார்.
மேலும் போலி கடப்பிதழில் உள்ள தகவல்களை பயன்படுத்தி Fomema வின் அங்கீகாரத்தை பெறுவதற்காக 600 ரிங்கிட் முதல் 1,000 ரிங்கிட்வரை வழங்கி வந்திருப்பதாக இன்று காலை புத்ரா ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Ruslin Jusoh கூறினார். இந்த கும்பலுக்கு முக்கிய உதவியாளராக இருந்துவந்த 40 வயது மதிக்கத்தக்க Philipinnes பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். வங்காளதேசம், இந்தியா, மியன்மார் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 211 கடப்பிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டன . Fomema வுக்கு சொந்தமான 144 ஆவணங்கள், 31 கடப்பிதழ்களின் முன்புறப் பகுதி, போலி கடப்பிதழ் தயாரிப்பற்கான பல்வேறு ஆவணங்கள் மற்றும் 16,000 ரிங்கிட் ரொக்கமும் இக்கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக Ruslin Jusoh கூறினார்.