கோலாலம்பூர், டிசம்பர்-21,கிறிஸ்மஸ் பெருநாளையொட்டி தனியார் வாகனங்களுக்கு அனைத்து நெடுஞ்சாலைகளிலும் 2 நாட்களுக்கு இலவச டோல் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையில் சொந்த ஊர்களுக்குத் திரும்புவோரின் வசதிக்காக, டிசம்பர் 23, திங்கட்கிழமை நள்ளிரவு 12.01 மணி தொடக்கம், டிசம்பர் 24 செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணி வரை அச்சலுகை வழங்கப்படும்.
பொதுப்பணி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் அதனை அறிவித்தது.
எனினும் ஜோகூர் பாலத்திற்கும், இரண்டாவது (2nd Link) பாலத்திற்கும் இந்த சலுகை பொருந்தாது.
இந்த இலவச டோல் கட்டணச் சலுகையால் அரசாங்கம் 38 மில்லியன் ரிங்கிட்டை நெடுஞ்சாலைப் பராமரிப்பு நிறுவனங்களுக்கு இழப்பீடாக வழங்கும்.
விழாக்காலங்களில் மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் மடானி அரசாங்கம் அறிவித்துள்ள இச்சலுகையை, வாகனமோட்டிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சொந்த ஊர்களுக்கான பயணத்தை சுமூகமாக்க, நன்கு திட்டமிட்டுக் கொள்ளுமாறும் பொது மக்களை அமைச்சு கேட்டுக் கொண்டது.