ஷா ஆலாம், ஆகஸ்ட் -10 – சிலாங்கூரில் கடந்த புதனன்று பகுதிநேர பர்கர் (burger) வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய சந்தேகத்தின் பேரில் 2 ரோந்து போலீஸ்காரர்கள் கைதாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் செய்த மறுநாளே இருவரும் கைதானதாக, தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ச்சா ஹூங் ஃபோங் (Cha Hoong Fong) தெரிவித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறையுடன் அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 384-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 6-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கிள்ளான் புக்கிட் திங்கியில் வாடிக்கையாளர் ஆர்டர் கொடுத்த பர்கர்களை அனுப்பும் வழியில் தாம் பணம் கேட்டு மிரட்டப்பட்டதாக, 22 வயது இளைஞர் போலீஸ் புகாரில் கூறியிருந்தார்.
கிள்ளான், பண்டார் புத்ரி வளைவுக்கு முன்பாக KESAS நெடுஞ்சாலையில் வைத்து அவ்விரு ரோந்து போலீசாரும் அவ்விளைஞரின் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
சாலை வரி காலாவதியானதை ஒரு சாக்காக வைத்து குறிப்பிட்ட பணத்தைக் கொடுக்குமாறும் இல்லையேல் மோட்டார் சைக்கிளுக்கு சீல் வைக்கப்படுமென்றும் இருவரும் மிரட்டினர்.
கடைசியில் தன்னிடமிருந்த 90 ரிங்கிட்டையும் பர்கர் பிளாஸ்டிக்கில் வைத்து அவ்விளைஞர் போலீஸ்காரர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.