ஷா ஆலாம், அக்டோபர்-5 – கிள்ளான், பண்டமாரானில் பாராங் கத்தியேந்திய கும்பல் 3 மாடி பங்களா வீட்டில் கொள்ளையிட்டதில், இந்தியர் என நம்பப்படும் குடும்பத்துக்கு 6 லட்சம் ரிங்கிட் நட்டம் ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில், 2 கார்களில் வந்த 10 முதல் 12 முகமூடி கொள்ளையர்கள் சுவரேறி குதித்து வீட்டுக்குள் நுழைவது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
ஓர் அறைக்குள் புகுந்து அங்கிருந்த மூவரைக் கட்டிப் போட்டு விட்டு, விலையுயர்ந்த பொருட்களை அவர்கள் தேடினர்.
அப்போது வீட்டிலிருந்த ஒருவர் கொள்ளையர்களுக்குத் தெரியாமல் போலீசுக்குத் தகவல் கொடுக்க, சற்று நேரத்தில் ரோந்து போலீஸ் வாகனம் வந்துசேர்ந்தது.
ஆனால் அதற்குள் அக்கும்பல் கார்களில் தப்பியோடியது.
ரொக்கப் பணம், நகைகள், சாமி சிலைகள் என கொள்ளையிடப்பட்டப் பொருட்களின் மொத்த மதிப்பு 6 லட்சம் ரிங்கிட்டாகும்.
கொள்ளையன் ஒருவன் பாராங் கத்தியால் வெட்டியதில், அவ்வீட்டைச் சேர்ந்த 37 வயது நபருக்கு தோளில் தையல்கள் போடப்பட்டன.
தப்பியோடிய கொள்ளை கும்பலைத் தீவிரமாகத் தேடி வரும் போலீஸ், சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் விசாரணைக்கு உதவுமாறுக் கேட்டுக்கொண்டது.