
புத்ராஜெயா, மே-8-உலகளாவிய விநியோக நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள PMKS எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், UDA ஹோல்டிங்ஸ் நிறுவனம் 3 முக்கியச் சலுகைகளை அறிவித்துள்ளது.
பிரதமரின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, KUSKOP எனப்படும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
அவ்வகையில், UDA நிறுவனத்தின் வணிக வளாகங்களில் கடை வைத்துள்ளவர்களுக்கு வாடகையில் 20 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதில் அனைத்து வாடகைதாரர்களுக்கும் 10 விழுக்காடும், தகுதியுள்ள PMKS தொழில்முனைவோருக்குக் கூடுதலாக 10 விழுக்காடுமாக தள்ளுபடி கிடைக்கும்.
இது தவிர, 3 மாதங்கள் வரை வாடகையைத் தள்ளிப்போடும் moratorium வசதி மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பயன்பாட்டுச் செலவுகளுக்கான நிவாரணங்களும் வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் வணிகங்களின் செயல்பாட்டுச் செலவுகள் குறைக்கப்படும் ஸ்டீவன் சிம் சொன்னார்.
இவ்வாண்டு மே முதல் டிசம்பர் வரை அமுலில் இருக்கும் இந்தச் சலுகைத் திட்டங்களுக்காக, UDA நிறுவனம் சுமார் 12.5 மில்லியன் ரிங்கிட் செலவை ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



