கோலாலம்பூர், செப்டம்பர் -17, குளோபல் இக்வான் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சிறார் இல்லங்களில் நிகழ்ந்த பல கொடுமைகள் அடுத்தடுத்து அம்பலமாகுமென போலீஸ் கோடி காட்டியுள்ளது.
அங்குள்ள சிறார்களும் பதின்ம வயதினரும் அனுபவித்த சித்ரவதைகள் குறித்த வீடியோ ஆதாரங்களை, தற்போது போலீஸ் ஆராய்ந்து வருவதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசேய்ன் (Tan Sri Razarudin Husain) தெரிவித்தார்.
குளோபல் இக்வான் சிறார் இல்லங்களைச் சேர்ந்த 2 சிறார்கள் சித்ரவதை அனுபவித்ததைக் காட்டுவதாகக் கூறப்படும் 2 வீடியோக்கள் வைரலாகியிருப்பது குறித்து IGP கருத்துரைத்தார்.
அவ்வீடியோக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சிறப்புக் பணிக் குழுவை தாம் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
வைரலான வீடியோவில், ஓர் ஆடவர் நெஞ்சில் கால் முட்டியை வைத்து அழுத்துவதால் வலி தாங்காமல் சிறுவன் அழுகிறான்.
மற்றொரு வீடியோவில், உள்ளங்கையில் ரோத்தானால் பலங்கொண்டு அடிக்கப்பட்டதால் இன்னொரு சிறுவன் வலியில் துடிக்கிறான்.
ஓரினப் புணர்ச்சி, கொடுமை உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் 20 சிறார் இல்லங்களிலிருந்து 402 சிறார்கள் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
புகார்தாரர், சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகநபர்கள் என இதுவரை 483 பேரிடமிருந்து போலீஸ் வாக்குமூலம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.