குவாந்தான், ஏப்ரல் 3 – பஹாங், குவாந்தான் சுங்கை இசாப் கேகே மாட் கடையில், கடந்த சனிக்கிழமை, சிறிய அளவில் தீ விபத்து ஏற்படக் காரணமான, பெட்ரோல் வெடிகுண்டு அல்லது “மோலோடோவ் காக்டெய்ல்” வீசிய சம்பவத்தில், ஒரு நபர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீஸ் நம்புகிறது.
சம்பவ இடத்தை சுற்றியுள்ள பல CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அது தெரிய வந்துள்ளதாக, குவாந்தான் போலீஸ் தலைவர் ACP வான் முஹமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அந்த சந்தேக நபரை தேடும் பணிகளை போலீஸ் முடுக்கிவிட்டுள்ளது.
அதே சமயம், விசாரணைக்கு உதவும் பொருட்டு, இதர சில CCTV பதிவுகளையும் போலீஸ் ஆராய்ந்து வருவதாக, ஜஹாரி சொன்னார்.
முன்னதாக, அச்சம்பவம் தொடர்பில், இதுவரை நால்வரிடமிருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக நேற்று பஹாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹ்யா ஒத்மான் கூறியிருந்தார்.
இம்மாதம் 30-ஆம் தேதி, புதிதாக செயல்படத் தொடங்கிய இரண்டே வாரங்களில், சுங்கை இசாப் கேகே மாட் கடை அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டதில், அதன் நான்கு பொருட்கள் அடுக்கும் முகப்புகளும், சில பொருட்களும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.