குவாலா குபு பஹாரு, ஏப்ரல் 24 – இந்தியர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படுவது அவசியம். அதற்கு நமது ஆதரவில் வெற்றி பெறுகின்ற பிரதிநிதி அரசாங்கத்தில் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் குவாலா குபு பாருவில் இருக்கின்ற ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள்
வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்க வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார் ம.இ.காவின் தேசியத்தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன்.
கட்சியின் நடவடிக்கை அறையை குவாலா குபு பாருவில் இன்று திறந்து வைத்து அங்கிருந்த வாக்காளர்களிடம் அவர் பேசினார். நாடாளவிய அளவில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தீர்க்கப்படும் எனும் எதிர்ப்பார்ப்பில் ம.இ.கா பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அவ்வகையில் நாம் பிளவுபடாமல் ஒற்றுமையாக இருந்தால் நமக்கான தேவைகளை தட்டிக் கேட்கும் உரிமை பெறுவோம் என்றார் விக்னேஸ்வரன்.
இந்த இடைத்தேர்தலின் ம.இ.கா-வின் பிரச்சார தலைவராக டத்தோ ஸ்ரீ சரவணன் மற்றும் துணைத்தலைவராக டத்தோ T மோகனும் நியமிக்கப்பட்டுள்ளதாக விக்னேஸ்வரன் அறிவித்தார்.
நம் நாட்டின் பேரரசர் ஒற்றுமை அரசாங்கம் அமைய கேட்டு கொண்டதற்கு இணங்க ம.இ.கா பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் பிரதமராக ஐந்தாண்டுகள் நீடிக்க ஆதரவு தர முடிவெடுத்தது. பிரதமரும் இந்தியர்களின் அதரவை திரட்ட கட்சியின் தேசியத்தலைவரை நேரடியாக அழைத்து பேசியதால் கடந்த 6 மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இந்த இடைத்தேர்தலில் ம.இ.கா ஒற்றுமை அரசாங்கத்திற்கு துணை நிற்பதாக துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.
இன்றைய ம.இ.கா நடவடிக்கை அறை திறப்பு விழாவிற்கு சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் Paparaidu, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், Barisan Nasional தலைவர்கள் ம.இ.கா கிளை உறுப்பினர்கள் என ஏறக்குறைய 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.