கோலாலம்பூர், ஜூலை 3 –
வீட்டுக் காவலில் இருக்க தம்மை அனுமதிக்கும், நாட்டின் 16-வது பேரரசரின் கூடுதல் ஆணை தொடர்பில், டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் செய்திருந்த சீராய்வு மனுவை, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
நஜிப்பின் அந்த மனுவிற்கு ஆதரவாக, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாயிட் ஹமிடி மற்றும் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் ஆகியோர் தாக்கல் செய்த உறுதிமொழி விண்ணப்பங்கள் அனைத்து, வெறும் செவிவழிச் செய்திகள் என்பதால், நீதிபதி டத்தோ அமர்ஜித் சிங் (Datuk Amarjeet Singh) , நஜிப்பின் சீராய்வு மனுவை நிராகரித்தார்.
கடந்த ஏப்ரல் முதலாம் தேதி, 71 வயது நஜிப் அந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், உள்துறை அமைச்சர், சிறைச்சாலை ஆணையர், தேசிய சட்டத்துறை தலைவர், கூட்டரசு பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியம், பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர், பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான தலைமை இயக்குனர் மற்றும் மலேசிய அரசாங்கம் ஆகியோரை நஜிப் ஏழு பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தார்.
அவர்களில் யாராவது ஒருவர் அல்லது அனைவரும், கூடுதல் ஆணையின் இருப்பை உறுதிச்செய்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென, நஜிப் அந்த மனுவில் கோரியிருந்தார்.
அப்படி கூடுதல் ஆணை இருப்பது உறுதிச் செய்யப்பட்டால், உடனடியாக அது அமல்படுத்தப்பட வேண்டும் எனவும், தாம் காஜாங் சிறையிலிருந்து உடனடியாக கோலாலம்பூரிலுள்ள தமது வீட்டிற்கு மாற்றப்பட வேண்டுமெனவும் நஜிப் கேட்டுக் கொண்டிருந்தார்.
SRC International நிறுவனத்திற்கு சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்த குற்றத்திற்காக, நஜிப் தற்சமயம் காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
2022-ஆம் ஆண்டு, நஜிப் அரச மன்னிப்பு மனுவை தாக்கல் செய்ததை அடுத்து, மன்னிப்பு வாரியம் அவரது சிறைத் தண்டனையை 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாகவும், அதே சமயம் அபராதத்தை 210 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்க்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது.